தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே நான்கு வழிச்சாலை: மத்திய அரசு அனுமதி
மார்ச் 1: மதுரை - ராமநாதபுரம், தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் ரூ. 2,230 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தில்லியில் கட்டமைப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி, திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, ஒடிசா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படவுள்ள நெடுஞ்சாலை, துறைமுகம், ரயில் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன் முடிவில் அமைச்சரவை ஒப்பதல் அளித்த தமிழக சாலைத் திட்டங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 49-ல் ராமநாதபுரம் - மதுரை இடையே நான்கு வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும். 115.110 கிலோ மீட்டர் தூரமுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 828.07 கோடி. அதில் ரூ. 145.07 கோடி நிதி, நிலம் கையகப்படுத்துதல், நில உரிமையாளர்கள் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், சாலை மறுநிர்மாணக் கட்டுமானம் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
இந்த வழித்தடத்தில் 30 மாதங்களுக்குள் சாலை அமைத்து முடிக்கவும் 30 ஆண்டுகளுக்குள் சாலை அமைத்து, இயக்கி, ஒப்படைக்கும் அடிப்படையில் (பி.ஓ.டி.), ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்படும். புதிய திட்டம் மூலம், மதுரை, சிலைமான், திருபுவனம், மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நான்கு வழி நெடுஞ்சாலை வசதி கிடைக்கும்.
இதே போல், தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 45-ல் விக்கிரவண்டி - தஞ்சாவூர் இடையே நான்கு வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும். 164.22 கிலோ மீட்டர் தூரமுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 1,402.50 கோடி. அதில் ரூ. 312.50 கோடி நிதி, நிலம் கையகப்படுத்துதல், நில உரிமையாளர்களுக்கு மறுவாழ்வு, மீள்குடியேற்றம், சாலை மறுநிர்மாணக் கட்டுமானம் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
இந்த வழித்தடத்தில் 27 மாதங்களுக்குள் சாலையை அமைத்து முடிக்கவும் 27 ஆண்டுகளுக்குச் சுங்க வரி வசூலித்துக் கொள்ளவும் ஒப்பந்ததாரருக்கு அனுமதி அளிக்கப்படும். சாலையை அமைத்து, இயக்கி, அரசிடம் ஒப்படைக்கும் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
இந்த திட்டம் மூலம், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு நான்கு வழி நெடுஞ்சாலை வசதி கிடைக்கும்.
நன்றி:தினமணி
அரியலூரில் மகளிர் நீதிமன்றம் அமைக்கப்படுமா?
அரியலூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் முகப்புத் தோற்றம்..
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பதிவாகும் மகளிர் தொடர்பான வழக்குகள் யாவும் பெரம்பலூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படுகின்றன. இதனால், பல்வேறு தரப்பினரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்ற, அரியலூரில் மகளிர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
மேலும், அரியலூரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1895-ஆம் ஆண்டில் அரியலூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 1981-ல் அரியலூரில் சார்பு நீதிமன்றமும், 2002-ல் விரைவு நீதிமன்றமும் தொடங்கப்பட்டு, தற்போது இயங்கி வருகின்றன. இதைத் தொடர்ந்து, மாவட்டத் தலைநகராக உருவாக்கப்பட்ட அரியலூரில் 2011-ல் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தொடங்கிவைக்கப்பட்டது.
தற்போது அரியலூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட மற்றும் விரைவு நீதிமன்றம், உதவி அமர்வு சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நீதிமன்றமாகவே அரியலூர் நீதிமன்றம் திகழ்கிறது.
நீதிமன்றத்துக்கு அருகில் பேருந்து நிலையம் இருப்பதால், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக அந்தப் பகுதி உள்ளது. இதனால், நீதிமன்றம் வரையிலும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக, மாலை நேரங்களில் நீதிபதிகள் நீதிமன்றத்தில் பணியாற்ற முடியாத சூழல் உருவாகிறது. கொசுத் தொல்லையும் அதிகம். நீதிமன்றத்தில் பிரிண்டர்கள், ஜெராக்ஸ் இயந்திரங்கள் வைப்பதற்குக் கூட இடம் இல்லாத நிலை இருந்து வருகிறது என்கின்றனர் வழக்குரைஞர்கள்.
நீதிமன்றத்துக்குள் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், நீதிமன்றத்துக்கு வரும் வழக்குரைஞர்கள், வழக்கோடு தொடர்புடையவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மாவட்ட நீதிமன்றம் அரியலூரில் அமைந்தாலும், மாவட்ட நீதிமன்றத்துக்குரிய எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலைதான் இங்கு நிலவி வருகிறது என்கின்றனர் வழக்குரைஞர்கள் பலர்.
அதுபோல, நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள பகுதி நீதிமன்றத்துக்குச் சொந்தமானது. இந்த இடத்தை மேம்படுத்தித் தருவதற்குரிய பணிகளை பொதுப் பணித் துறையினர் மேற்கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது என்கின்றனர் அவர்கள்.
மாவட்ட நீதிபதிக்கு அரசு வாகனம் எப்போது? அரியலூரில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பதவியேற்று 6 மாதங்கள் ஆக உள்ள நிலையில், இன்னமும் அவர் தனது சொந்த வாகனத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார். மாவட்ட நீதிபதிக்கு அரசு வாகனம் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வியும் அரியலூர் வழக்குரைஞர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.
மகளிர் தொடர்பான வழக்கு : மாவட்ட நீதிமன்றம் இல்லாத போதும், மகளிருக்கு எதிரான வழக்குகளை அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களே விசாரிக்கலாம் என்று உள்ள நிலையில், அரியலூரில் மாவட்ட நீதிமன்றம் அமைந்து 6 மாதங்களாகியும், இன்னமும் பெரம்பலூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில்தான் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், வழக்கு விசாரணைக்காக மாவட்டத்தின் கடைகோடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் வரை சென்று வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. தற்போது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்புதான் மாவட்ட நீதிமன்றம் இல்லை எனக் கூறினார்கள். இப்போது மாவட்ட நீதிமன்றம் வந்த பிறகும், பெரம்பலூரில் தொடர்ந்து விசாரணை நடப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை என்கின்றனர் வழக்குரைஞர்கள். எனவே, அரசு உடனடியாக அரியலூரில் மகளிர் நீதிமன்றம் அமைப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
நன்றி:தினமணி
தமிழர் நீதிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து, அரியலூரில் தமிழர் நீதிக் கட்சியின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்த வேண்டும். கேரளத்துடன் தற்போது உள்ள இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.
கச்சத்தீவை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிóட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர் தர்ம. அண்ணாதுரை தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் க. சம்பத், மாவட்ட இளைஞரணிச் செயலர் ரவி, மாவட்ட இளைஞரணித் துணைச் செயலர் கலியமூர்த்தி, மாவட்டத் தலைவர் பெ. ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்
கட்சியின் நிறுவனர்- தலைவர் சுபா. இளவரசன் ஆர்ப்பாட்டத்திóல் பங்கேற்று கண்டன உரையாற்றினார். பெரியார் திராவிடர் கழக அரியலூர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பகுத்தறிவாளன், தமிழ்க்களம் அரங்கநாடன், வழக்குரைஞர் சசிகுமார், புரட்சி தர்மலிங்கம், புயல் செல்வம், தமிழர் நீதிக் கட்சியின் மாநில மகளிரணித் தலைவி இ. கவியரசி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர். கேரள அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக, தமிழர் நீதிக் கட்சியின் அரியலூர் ஒன்றியச் செயலர் பாலையா வரவேற்றார். ஒனறியத் தலைவர் எழில்நிலவன் நன்றி கூறினார்.
நன்றி:தினமணி
ஜெயங்கொண்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஜெயங்கொண்டம், டிச. 29: ஜெயங்கொண்டம் நகராட்சிப் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழைமை நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் நகராட்சி, நெடுஞ்சாலைத் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை டிச. 28-ம் தேதிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
ஆனால், பலர் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாததால், வியாழக்கிழமை நகராட்சி ஆணையர் ந. புகழேந்தி, வட்டாட்சியர் பொன்முடி ஆகியோர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்கள், நகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள், இயந்திரங்களைக் கொண்டு, ஜெயங்கொண்டம் நான்கு சாலை, விருத்தாசலம் சாலை, சிதம்பரம் சாலை, மேட்டுத் தெரு, பேருந்து நிலையச் சாலை, தா.பழூர் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணி வெள்ளிக்கிழமையும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினமணி
இலையூர் - உடையார்பாளையம் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்
ஜெயங்கொண்டம், டிச. 14: அரியலூர் மாவட்டம், இலையூர் - உடையார்பாளையம் இடையே சேதமடைந்துள்ள சுமார் 4 கி.மீ. தொலைவுள்ள சாலையைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்,
உடையார்பாளையம் வட்டம், இலையூர், வாரியங்காவல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள், இலையூர்- உடையார்பாளையத்திற்கு இடையே இருந்த சாலையை நீண்ட நாள்களாகப் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்தச் சாலை முழுவதும் சேதமடைந்ததால், உடையார்பாளையம் செல்வவும், அதன் வழியாகச் செல்லக்கூடிய மற்ற ஊர்களுக்குச் செல்லவும் ஜெயங்கொண்டம் வழியாக 16 கி.மீ. தொலைவு கடந்து செல்லவேண்டியுள்ளது.
ஜமீன்தார் காலத்தில் உடையார்பாளையம் தலைமையகமாக இருந்தது.
உடையார்பாளையத்தை மையமாகக் கொண்டு, உடையார்பாளையத்திலிருந்து ஜெயங்கொண்டம், வாணதிரையான்பட்டினம் வழியாக கும்பபகோணம், அரியலூர், சோழங்குறிச்சி, இரும்புளிகுறிச்சி வழியாக செந்துறை, இலையூர், வாரியங்காவல் வழியாக ஆண்டிமடம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பாதை அமைக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய மூன்று ஒன்றியங்களைக் கொண்ட உடையார்பாளையம் வட்டத்தின் பெயரை 1967-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, ஜெயங்கொண்டசோழபுரம் என்று மாற்றியதால், உடையார்பாளையம் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, உடையார்பாளையம் என்ற பெயரை மாற்றுவதைக் கைவிட்டு, அனைத்து அரசு அலுவலகங்களும் ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டன.
இதனால், உடையார்பாளையத்திற்கும், இலையூருக்கும் இடையே உள்ள 4 கி.மீ. தொலைவுள்ள சாலை பராமரிப்பின்றி முழுவதும் சேதமடைந்தது.
மேலும், போக்குவரத்துக்குப் பயண்படாத நிலையில் இந்தச் சாலை உள்ளதால், இலையூர், வாரியங்காவல், தேவனூர், குவாகம், குளத்தூர், வல்லம் போன்ற கிராமங்களின் மக்கள், திருச்சி அரியலூர் போன்ற ஊர்களுக்குச் செல்ல வேண்டுமானால், கிழக்கே 8 கி.மீ. தொலைவிலுள்ள ஜெயங்கொண்டம் சென்று, பின்னர் வேறு பேருந்து மாறிச் செல்ல வேண்டியுள்ளது.
மேற்கே உள்ள ஊருக்குச் செல்ல கிழக்கு நோக்கி செல்வது வேடிக்கையாக உள்ளது.
இந்தச் சாலையைச் சீரமைக்கக் கோரி, கடந்த 2005 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 500 பெண்கள், இந்த வழியாக நடந்து சென்று உடையார்பாளையம் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் பெறக்கூடிய இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும்
என இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
நன்றி:தினமணி
